
ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்த முடியாது.
இந்நிலையில், எங்களுக்குத் தெரியாத எதிரிகளோடுதான் நாங்கள் மோதுகின்றோம் என இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“இந்த தீவிரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்த முடியாது. எங்களுக்குத் தெரியாத எதிரிகளோடுதான் நாங்கள் மோதுகின்றோம். இந்த மோதலானது வலய மற்றும் சர்வதேச ரீதியிலான மோதலாக அமைகிறது.
அதனால் இந்த நாட்டில் முழுமையான சமாதான சூழலை ஏற்படுத்துவதற்காக எவருக்கும் குறிப்பிட்ட காலத்தை சுட்டிக்காட்ட முடியாது. தீவிரவாதிகள் குறித்து காலகட்டத்தை எவராலும் அனுமாணிக்கவும் முடியாது.
எனினும் எமது படையினர் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். பொதுமக்களும் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என்பதோடு தெளிவாகவும் இருக்க வேண்டும்.
24 மணிநேரமும் படையினர் தயார்நிலையில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளின்போது சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். இருந்தாலும் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே கவனிக்க வேண்டும்.
நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைய இராணுவத்தினருக்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும் கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும்” இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.