சீரற்ற வானிலையால் இயல்புநிலை பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு, 8 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் 8 வீடுகள் முழுமையாகவும் 703 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்றில் அள்ளுண்டு இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, ஹட்டன் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமென்பதால், பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor