முல்லைத்தீவு கோட்டை அழிவடைகிறது – பாதுகாக்க தவறும் தொல்லியல் திணைக்களம்.

முல்லைத்தீவு ஒல்லாந்தா் கோட்டை முற்றாக அழிவடையும் நிலைக்கு சென்றிருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடம் என தொல்பொருள் திணைக்களம் இதனை அடையாளப்படுத்தியுள்ள போதிலும் இங்கே தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகைகள் எதனையும் காணக்கிடைக்கவில்லை.

அத்தோடு, சிதைவடைந்து செல்லும் கோட்டையின் எச்சங்களை பாதுகாப்பதற்கோ தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பௌத்த இடங்கள் என தமிழ் மக்களின் புராதன ஆலயங்களையும், வரலாற்று இடங்களையும் முல்லைத்தீவில் அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் தொல்லியல் திணைக்களம் பல நூற்றாண்டு கால தமிழர் வீர வரலாற்றை கூறும் இடங்களை புறக்கணித்து வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தில் 1715ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இந்த கோட்டை அமைக்கப்பட்டது. இதன்பின்னர், இலங்கையை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை 1795இல் கைப்பற்றி மீள் உருவாக்கம் செய்தார்கள். அத்தோடு ஆங்கிலேயர்களின் படைத்தலைமையகமாகவும் இந்த கோட்டை விளங்கியது.

ஆங்கிலேயருடன் போர் புரிந்த வன்னி மண்ணின் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இந்த கோட்டையை கைப்பற்றி இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றி பெற்றான் என வரலாறு கூறுகின்றது.இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் நுட்பமாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

ஆனால், அவர்களின் மௌனிப்புக்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரால் 2009இல் இந்த கோட்டை அழிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய வளாகத்தின் கட்டுமானப்பணிகளின் போதும் மிக மோசமாக அழிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த கோட்டையின் ஒருபகுதியை இராணுவத்தினர் அபகரித்து முகாம் அமைத்துள்ள நிலையில் எஞ்சிய எச்ச பகுதிகள் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளாலும், இயற்கையாலும் சிதைவடைந்து செல்கின்றது.விரைவில் முற்றாக அழிவடையக் கூடிய சூழலும் தோன்றியுள்ளது.

எனவே, உரியவர்கள் இந்த வரலாற்று பொக்கிஷத்தின் எச்சங்களையாவது பாதுக்காக்க முன்வர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்