மணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு!!

மணிரத்னம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் சாந்தனு இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

பல்வேறு நடிகர், நடிகைகளை ஒரே படத்திற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை அமைத்து படங்கள் இயக்குவதில் மணிரத்னம் முக்கியமானவர்.

அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் அந்த பாணியில் உருவாகியிருந்தது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி உருவாகும் படமும் பெரும் நட்சத்திரக் கூட்டணியுடன் தயாராகிறது. அவர் இயக்கும் படம் மட்டுமல்லாமல் கதை எழுதி தயாரிக்கும் படமும் அவ்வாறே உருவாகிவருகிறது.

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன், படைவீரன் படத்தைத் தொடர்ந்து இயக்கும் படம் வானம் கொட்டட்டும். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது சாந்தனுவும் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதனும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. சென்னை, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor