தேசபக்தியுடன் பறக்கும் மங்கல்யான்!

அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தப்ஸி, நித்யா மேனன் நடித்த மிஷன் மங்கல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அக்‌ஷய் குமாரின் நடிப்பில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைகோள் பற்றிய திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அக்‌ஷய் குமார் சமீப காலமாக நடித்த பேட் மேன், கோல்ட், கேசரி ஆகிய படங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் படங்களே. அதனைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான படம் மிஷன் மங்கல்.

இந்தியாவிலிருந்து முதன்முதலில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைகோள் பற்றிய உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படமிது. அறிவியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் இச்சாதனையைச் செய்த விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், தாரா ஷிண்டேவாக வித்யா பாலனும் நடித்திருக்கிறார்கள். மேலும் டாப்ஸி, நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா, ஷர்மான் ஜோஷி, கீர்த்தி குல்கர்னி போன்ற பிரபல நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இதன் டீசரைத் தொடர்ந்து நேற்று(ஜூலை 18) இதன் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.

அக்‌ஷய் குமார் தலைமையில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செயற்கைகோள் தோல்வியில் முடிய, அனுபவமற்ற இளம் அணியுடன் புதிய திட்டத்துடன் களமிறங்குகிறார் அக்‌ஷய். இஸ்ரோவிலிருக்கும் சீனியர் விஞ்ஞானிகள் அவரது திட்டத்தை மடத்தனம் என அறிவிக்க, மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். உத்வேகம் அளிக்கக் கூடிய படமாகயிருக்கும் என இதன் டிரெய்லர் உணர்த்துகிறது.

அக்‌ஷய் குமார், பால்கி, அனில் நாயுடு, அருணா பட்டியா இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அமித் திரிவேதி இசையமைக்கின்றார். இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor