ஆடை Vs கடாரம் கொண்டான்: ஜெயிக்கப்போவது யார்?

விக்ரமும் அமலா பாலும் இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸில் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இவர்கள் நடித்துள்ள படங்கள் இரண்டுமே மிகவும் வித்தியாசமானவை.

‘வெறுமனே நடித்துவிட்டுப் போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் கதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்’ எனக் கூறும் அமலா பால், ஆடை இல்லாமல் நடித்திருக்கும் படம் ‘ஆடை’. சேது படம் தொடங்கி கடைசியாக வெளியான சாமி – 2 வரை தான் நடிக்கும் கதாபாத்திரமாக மாறக்கூடிய விக்ரம் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், ஆக்‌ஷன் த்ரில்லர் படம். அதே நேரத்தில், ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை படத்தின் நாயகி அமலா பால், ஆடையில்லாமல் தோன்றிய படத்தின் டீசர் வெளியாகி ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இந்த இரண்டு படங்களும் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளன.

இருப்பினும், சினிமா வர்த்தக வட்டாரங்கள் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்துக்குத்தான் அதிக எதிர்பார்ப்பும் ஓப்பனிங்கும் இருக்கும் என்று நம்புகின்றன. கிடைத்த தகவலின்படி கடாரம் கொண்டான் படம் 450க்கும் மேற்பட்ட திரைகளிலும், ஆடை படம் 275 திரைகளிலும் இன்று திரையிடப்பட உள்ளன.

பொதுவாக கதாநாயகனுக்கான திரைக்கதைதான் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் கதாநாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் படமும் இங்கு வணிக ரீதியாக வாகை சூடும் என விஜயசாந்தி நடித்த பூ ஒன்று புயலானது படத்தின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தபட்டது. கடந்த பத்தாண்டுகளாக நாயகிகளை முன்னிறுத்தும் படங்கள் பல வந்திருந்தாலும், இதில் நயன்தாரா நடித்த படங்கள் மட்டுமே திரையரங்குகள் நிரம்பி வழிவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன விதிவிலக்காக.

கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான மஹாநதி, உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியின் பாகமதி உலக அளவில் ரூ.65 கோடியை ஈட்டியது.

இவையெல்லாம், சினிமா பார்வையாளர்களின் ரசனை மாறி வருவதைக் காட்டுகிறது என்கிறது கோடம்பாக்க வட்டாரம். ஒரு நடுத்தர அளவிலான ஹீரோ சம்பந்தப்பட்ட படத்தைவிட பெண் கதாநாயகிகளைக்கொண்ட திரைக்கதைகளை எளிதில் சந்தைப்படுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

மேலும், உதாரணத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’ படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நட்சத்திர நடிகை இல்லை என்றாலும் சினிமா பார்வையாளர்கள் பெரிய அளவில் இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் குவிந்தார்கள். புதிய தலைமுறை பெண்கள் குடும்பத்துடன் கூட்டமாக வர மல்டிஃப்ளக்ஸ் தியேட்டர்களின் வரவும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. ஒரு நடிகையின் படம் தனியாக வெற்றி பெற்றால், இயல்பாகவே அது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகி விடுகிறது.

கனமான கதை களத்துக்குள் தங்களைக் கதையின் நாயகிகளாக, மாற்றிக்கொண்டு வெற்றி பெற்ற விஜயசாந்தி, அனுஷ்கா, ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் இது போன்ற படங்களில் ஆடைகளின்றி துணிச்சலாக நடித்ததில்லை. ஆடை படத்தில் அமலா பால் தமிழ் சினிமாவில் தன் மார்க்கெட்டை நிலை நிறுத்திக்கொள்ள இம்மாதியான வேடத்தில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

நான்கு கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அமலா பால் நடித்த ஆடை, விக்ரம் நடித்திருக்கும் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கடாரம் கொண்டான் என இரண்டு படங்களுமே எதிர்பார்த்த விலைக்கு வியாபாரம் ஆகாததால் தயாரிப்பாளர்களே நேரடியாக வெளியிடுகின்றனர்.


Recommended For You

About the Author: Editor