
நம்பிக்கை வாக்கெடுப்பை மதியம் 1.30 மணிக்குள், முடிக்க வேண்டும் என்று, ஆளுநர் விதித்த கெடுவிற்குள் அது நடக்கவில்லை.
எனவே, அடுத்து மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கெடு விதித்தார்.
அந்த காலக்கெடுவிற்குள்ளும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்திருந்தாலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதமும், அமளியும் நீடித்தது. எனவே நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
எனவே, இன்று பகல் 1.30 மணிக்குள், முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் கெடு விடுத்திருந்தார்.

நடக்கவில்லை
ஆனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது குமாரசாமி உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது சில வேறு விவகாரங்கள் பற்றியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் பேசினர். இதனால் மதியம் 1 மணியான பிறகும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் அறிகுறியே தென்படவில்லை.

சபாநாயகர் தீர்மானம்
அப்போதுதான் முதல் முதலாக சட்டசபையில், தனக்கு ஆளுநர் கடிதம் எழுதிய விவகாரத்தை பேசினார் குமாரசாமி. இப்படி சட்டசபை அலுவல் நேரத்தை தீர்மானிக்க ஆளுநருக்கு சட்டத்தில் அவகாசம் உள்ளதா என கேட்டார் அவர்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடவில்லை.
முதல்வரே கொண்டு வந்த இந்த தீர்மானம் இப்போது அவையில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, இது சபாநாயகர் அதிகார வரம்பில் உள்ள விஷயம். இதில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்றார்.