
பொது இடத்தில் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்த இரு பெண்களுக்கு தலா €1,000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, பரிஸ் பதினாறாம் வட்டாரத்தில் உள்ள place Charles-de-Gaulle இல் Femen அமைப்பைச் சேர்ந்த இரு பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். உடலில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதியிருந்தமையும் இந்த தண்டனைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இன்று திங்கட்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவருக்கும் தலா €1,000 குற்றப்பணம் அறவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக நிர்வாணமாக போராடும் Femen அமைப்பைச் சேர்ந்த இப்பெண்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கோ, அல்லது அதை தடை செய்வதற்கோ மிகச்சரியான சட்டங்கள் எதுவும் இல்லை என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் இடைஞ்சல், இடையூறு விளைவித்தல் போன்ற வழக்குகளே போடக்கூடியதாக உள்ளதே தவிர, நிர்வாண போராட்டம் குறித்து போதிய சட்டங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.