கூட்டமைப்பின் வாக்கு வங்கிகையை பாதுகாக்க முயலும் ரணில் ?

ஐக்கியதேசியக் கட்சியைக் காப்பாற்றி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பாதுகாத்து அவர்களுக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே யாழ் வந்த பிரதமர் இரண்டு வருடத்தில் தீர்வு என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டிருக்கின்றார். இது உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து அரசியல் நிலைமையை வெளிப்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றி பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகஅவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் இரண்டு வருடத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய அரசியற் தீர்வைதான் எடுத்துக் கொடுப்பேன் என்று கூறுவது உண்மையிலையே ஐக்கியதேசியக் கட்சியின் அரசியல் வங்குரோத்து நிலைமையை வெளிப்படுத்துவதாகத் தான் இருக்கிறது என்று நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஜன பெரமுனவாக இருக்கலாம். இவை அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கிற ஒரே நோக்கத்திற்காக செயற்படுகின்ற தரப்பாக இன்றைக்கு மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட தரப்புகளுக்கு தங்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்குகிறது என்ற காரணத்தினாலும் தங்களுடைய நலன்கள் முற்றுமுழுதாக கைவிட்டு வல்லரசுகளின் விருப்பத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி போன்ற தரப்புக்களை ஆதரித்துக் கொண்டிருப்பது மிகப் பிழையும் துரோகமும் என்று கருதுகின்றனர். அதனால் தான் கூட்டமைப்பையே தூக்கியெறியும் நிலைக்கு தமிழ் மக்கள் வந்திருக்கின்றனர்.

அப்படிப்பட்ட மிக மோசமாக ஒரு பின்னடைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கிற நிலையில் தங்களுடைய பங்காளிகளாக கூட்டமைப்பினர் இருக்கிற காரணத்தால் ஏதோவொரு வகையில் அது மக்களை ஏமாற்றியாவது அவர்களைக் காப்பாற்றுவதற்கு இப்படிப்பட்ட கருத்துக்களை பிரதமர் சொல்லியிருக்கின்றார்.

ஆக கூட்டமைப்பை காப்பாற்ற தமிழ் மக்களை ஏமாற்றும் நிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதாகவும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. ஏனெனில் அந்தளவு தூரத்திற்கு ஐக்கியதேசியக் கட்சி தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாத அளவிற்குஅவர்களுடைய கருத்து எதுவாக இருந்தாலும் அது ஒரு கேலிக் கூத்தாகவும் மிக மோசமாக அவர்களை அம்பலப்படுத்துகின்ற செயல்களாகத் தான் இன்றைக்கு இருக்கின்றதென்பதுதான் எங்களுடையகருத்தாக இருக்கின்றது என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்