புதுக்குடியிருப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றமப்பட்டவை!!

முல்லைத்தீவு – உடையார்கட்டு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் பராமரிக்கப்பட்ட விவசாயப் பண்ணையினை தொடர்ந்தும் பராமரிக்கவுள்ளதாக அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின்போதே, மேற்குறிப்பிட்ட விடயம் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் பெறுவதன் மூலம் சாதாரண கிணறுகளில் நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆழ்துளைக் கிணற்றுக்கு மாற்றுவழி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முல்லைத்தீவின் பல இடங்களில் இருந்து மணல்கள் வியாபாரத்திற்காக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக உடையார்கட்டு கள்ளியடி பகுதிகளில் இருந்து பெருமளவிலான மணல் கொண்டுசெல்லப்படுகிறது. இவை பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே கொண்டுசெல்லப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதுடன், மணல் அனுமதியினை தனிநபர்களுக்கு வழங்காமல் அமைப்புகளுக்கு மாத்திரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாகான சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச தினைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor