நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி நளினியால் கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த விகாரம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து ஆளுநருக்கு நோட்டிஸ் அனுப்ப முடியாது எனவும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க கோருவதற்கு நளினிக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை எனவும், குறித்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து வாதாடிய பிரதி வழக்கறிஞர், தமிழக அரசின் தீர்மானத்தை 9 மாதங்களாக நிறைவேற்றாமல் இருப்பது ஏழு பேரையும் சட்ட விரோத காவலில் வைத்திருப்பதற்கு சமம் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நளினியின் வழக்கு ,விசாரணைக்கு பொருத்தமற்றது என கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவர் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பான தீர்மானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor