காணாமல்போன தாயை தேடும் சிறுவன்!!

மாத்தளை – தம்புள்ளையை சேர்ந்த 10 வயதான சிறுவன், பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டு இரண்டு மாதங்களாக தனது தாயை தேடி நாடு முழுவதும் சுற்றித்திரிந்து வருகிறார்.

தனது தாயை தேடி வரும் சிறுவன், தனது பாட்டியுடன் ஊடகவியலாளர்களின் உதவியை நாடி நேற்று தம்புள்ளை பிரதேசத்திற்கு வந்திருந்தார்.

தனது தாயை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை எனவும் அவரை தேடித் தருமாறும் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்புள்ளை லெனதொர சேருகஸ்யாய பிரதேசத்தை சேர்ந்த 10 வயதான சுபுன் லக்ஷான் என்ற சிறுவனே இவ்வாறு தனது தாயை தேடி வருகிறார்.

தனது தாயின் புகைப்படம் ஒன்றை காட்டிய சிறுவன், தனது தாய், பொலன்னறுவை பிரதேசத்தில் வீடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில், அவர் பற்றிய எந்த தகவல்களும் இல்லை எனக் கூறியுள்ளார்.

37 வயதான எம்.எம்.கமலா ரஞ்சனி என்ற தனது தாயை தேடித்தருமாறு நாவுல, மெதிரிகிரிய மற்றும் தியசேன்புர பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவன் சிறு வயதில் தந்தையை இழந்துள்ளதுடன் பாட்டியுடன் வசித்து வருகின்றார்.

தனது மகள் எப்போதும் அவரது மகனுக்கோ, தனக்கோ உணவுக்காக பணத்தை கொடுக்காமல் இருந்ததில்லை என சிறுவனின் பாட்டி ரன்மெனிக்கே தெரிவித்துள்ளார்.

தனது மகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என ரன்மெனிக்கே அழுது புலம்பியவாறு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

கூலித் தொழில் செய்யும் தனக்கு, மகளை தேடி அலைய பணம் இல்லை என்பதால், ஊடகவியலாளர்களின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor