கன்னியா விவகாரம்: இந்தியாவுடன் பேச்சு!!

இந்து மதகுருவை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் அவமானப்படுத்தியமை தொடர்பாக இந்தியாவில் உள்ள இந்து சமய அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீா்மானித்துள்ளதாக சின்மயா மிஷன் அமைப்பைச் சேர்ந்த குருக்கள் ஜக்ரத சைத்தன்ய சுவாமி தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென்கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்ற தடையுத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடைசெய்திருந்தனா்.

இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தென்கைலை ஆதீனத்தை சேர்ந்த அகத்தியர் அடிகளார் மீதும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில றமணி அம்மையாா் மீதும், பௌத்த மதகுரு மற்றும் பொலிஸாா் முன்னிலையில் அங்கு குழுமியிருந்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் அநாகரிகமாக அணுக முற்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கண்டித்து ஜக்ரத சைத்தன்ய சுவாமிகள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். ஊடக அமையத்தில், நேற்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “திருகோணமலை கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென்கலை ஆதீனம் மற்றும் பிள்ளையார் ஆலய உரிமையாளர் ஆகியோர் மீது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலரால் அநாகரிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறான சம்பவத்தை கண்டிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடா்பாக இந்து சமய தலைவா்கள் ஒன்றிணைந்து இந்தியாவுடன் பேசுவதற்கும் இந்தியாவில் உள்ள இந்து சமய அமைப்புக்களுடன் பேசுவதற்கும் தீா்மானித்துள்ளோம்.

அதேபோல் இந்து சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் தீா்மானித்துள்ளோம்.

மேலதிகமாக இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor