கி.பி.13 நூற்றாண்டு உரிய இந்து ஆலயம்

கி.பி.13 நூற்றாண்டு உரிய இந்து ஆலயம் அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைமையில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் புராதன தமிழர் தொல்லியல் இடங்கள் பல, கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆவணப்படுத்தப்பட முடியாத நிலைமையில் அழித்தும், அழிந்தும், மறந்தும், மறைந்தும் காணப்பட்டன.இவ்வாறான சூழ்நிலையில் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் முயற்சியால் மன்னார் கட்டுக்கரை, திருகோணமலை திருமங்களாய், பூநகரி உட்படவடக்கு – கிழக்கில் உள்ள தமிழர் புராதன இடங்கள் மற்றும் மரபுரிமைச் சின்னங்கள் பல அடையாளப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டமை சிறப்பானது. 

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவரும் தொல்லியல்துறை இணைப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.13 நூற்றாண்டு உரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேசமான குருந்தன் குளம் பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றி ஆராயும்போது, இவ்விடம் சிங்கள இலக்கியமான இராஜாளி மற்றும் பாளி நூலான சூள வம்சம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ‘குருந்தி’ என்ற இடமாக இருக்கலாம் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் ‘சாவகனுக்கும்’ இவ்விடத்திற்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதை மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவ்விநாயகர் ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுடன், பழைமையான சுவர்களும் தூண்களும் காணப்படுகின்றன.

-பேராசிரியர், விரிவுரையாளர்கள்
மற்றும் வரலாற்றுத்துறை மாணவர்கள்


Recommended For You

About the Author: Editor