கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முன்னிலை!

உலகம் முழுவதும் தீவிரமாக மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துவருகிறது.

சீனாவின் வுஹான் நகரில் உருவானதாகக் கண்டறியப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் இன்று உலகின் 180 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள நிலையில் இறுதி அறிக்கையின்படி 5 இலட்சத்து 32 ஆயிரத்து 263 பேரைப் பாதித்துள்ளது.

அத்துடன் , இதுவரை 24 ஆயிரத்து 90 பேரின் உயிரை மாய்ந்துள்ள இந்த வைரஸால் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 349 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இவ்வாறிருக்க வைரஸ் பரவல் மிக வேகமாகப் பரவும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு நேற்று மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 594 ஆகக் காணப்படுகிறது.

அத்துடன், அமெரிக்காவில் நேற்று மட்டும் 268 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 5 பேரின் உயிரிழப்பு பதிவாகி மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயோர்க் மாகாணத்தில் 37 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் அங்கு இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளதால், அமெரிக்காவில் கொரோனாவின் மையமாக நியூயோர்க் காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸால் பெரும் மனித அழிவை சந்தித்துவரும் நாடுகளாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் பதிவாகியுள்ளதுடன், ஸ்பெயினில் 718 பேரும் இத்தாலியில் 712 பேரும் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் மொத்தமாக 8 ஆயிரத்து 215 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் 6 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், ஸ்பெயினில் நேற்று மட்டும் புதிய நோயாளர்கள் 8 ஆயிரத்து 271 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பெரும் பாதிப்பை எதிர்கொண்டுவரும் நாடாக பிரான்ஸ் உள்ள நிலையில் அங்கு நேற்றுமட்டும் 365 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 600ஐத் தாண்டியுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் நேற்று மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளதுடன் நெதர்லாந்திலும் 78 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மேலும் ஜேர்மனியில் 61 பேரும், சுவிற்சர்லாந்தில் 39 பேரும் பெல்ஜியத்தில் 42 பேரும் மரணித்துள்ளதோடு பல நாடுகளில் கட்டுக்கடங்காத வைரஸ் பரவல் மனிதப் பேரழிவை ஏற்படுத்திவருகின்றது.


Recommended For You

About the Author: Editor