கொரோனா எதிரொலி: சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா இரத்து

சபரிமலையில், பங்குனி உத்திர ஆராட்டு விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 28ஆம் திகதி, நடை திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி, காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி ஆராட்டுடன் நிறைவு பெறுவதாக, அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் இம்மாதம் 28ஆம் திகதி மாலை 5 மணிக்கு, நடை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் ஆலய நிர்வாகம் கூறியிருந்தது.

ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் அனைத்து ஆலயங்களிலும், திருவிழாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்து செய்யப்பட்ட திருவிழா, தந்திரியின் ஆலோசனை பெற்று, வேறு நாளொன்றில் நடத்தப்படுமென ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்