முல்லையில் மரக்கறி, மீன்களை சந்தைப்படுத்த ஏற்பாடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளை மாவட்டத்திற்குள்ளேயே கிராமங்கள் தோறும் சென்று சந்தைப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், “சுகாதார நடவடிக்கையின் பொருட்டு, எமது மாவட்டத்தின் உற்பத்திகளை எமது மாவட்டத்திற்குள்ளேயே பகிரவேண்டும் எனத் தீர்மானித்துள்ளோம்.

போக்குவரத்து ஊடாக பிற மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றபோது கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளூடாக மட்டுப்படுத்திய அளவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வது எனத் தீர்மானித்திருந்தோம்.

அவ்வாறு பிடிக்கப்படுகின்ற மீன்களை வியாபாரிகளூடாக வாகனத்தின் மூலம் எடுத்துவரப்பட்டு பிரதேச செயலக ரீதியில் அல்லது கிராம மட்டங்களில் இருக்கின்ற சிறிய வியாபரக் குழுக்களுக்கு வழங்குவதெனவும், அந்த வியாபாரக் குழுக்கள் கிராமங்களுக்குள் சென்று மீனை குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட விலையில் சந்தைப்படுத்துவதென முடிவெடுத்துள்ளோம்.

நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஊடாக கணக்கிட்டு, உரிய விலை நிர்ணயத்தினை வழங்குமாறும் கோரியிருக்கின்றோம்.

அதேபோல் விவசாயச் செய்கைகளிலும், எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிவகைகளை எமது மாவட்டத்திற்குள்ளேயே சந்தைப்படுத்துவதென முடிவெடுத்துள்ளோம்.

எமது மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளிலேயே அதிகமான விவசாய மற்றும் மரக்கறிச் செய்கைகள் அதிகமாக இருக்கின்றன. பல பிரதேசங்களில் மரக்கறிச் செய்கைகள் இல்லாமலே காணப்படுகின்றது.

மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளை, மரக்கறித் தேவையுள்ள பகுதிகளுக்கு, இனங்காணப்பட்ட வியாபாரிகளூடாக கிராமங்களுக்குள் வீடுவீடாகச் சென்று மரக்கறிகளைச் சந்தைப்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளோம்.

இதன்மூலம் மாவட்டத்திலுள்ள அனைவரும் மரக்கறிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், நுகர்வோர் அதிகமாக சந்தைக்கு வருகைதந்து கூட்டம் கூடவேண்டிய தேவையும் ஏற்படாது.

இயன்றளவில் நாம் கூட்டங்களைக் குறைத்து, சன நெருக்கங்களைக் குறைத்து வெளிமாவட்ட தொடர்புகளையும் குறைக்க வேண்டும். சுகாதார வைத்திய அதிகாரிகளும் இவ்வாறே வலியுறுத்துகின்றனர். எனவே இதற்கான ஒத்துழைப்பை பொதுமக்களும் வழங்கவேண்டும்.

இதேவேளை, நாளைய தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இதன்போது, பரந்த மைதானங்களிலோ அல்லது வீதிகளிலோ இவ்வாறான சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சன நெரிசல் குறைந்த நிலையில் இருக்கும்.

எனவே அவ்வாறு கூட்டம் கூடுவதைக் குறைப்பதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக பிரதேச சபைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor