பொதுச் சந்தையில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மருதனார்மடம் உள்ளிட்ட பெரும்பலான பொதுச் சந்தைகள் கிராமிய சந்தைகளாகவும் வீதிகளில் கூடும் சந்தைகளாகவும் முன்னெடுக்க என்று பிரதேச சபைகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கோரோனா தொற்றுக்குள்ளானவர் எமது வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குள் வசித்து வருவதனால் நோய்தொற்றை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்திற்கு எமது சபைக்கும் பெரும் கடப்பாடு உள்ளது.

எனவே எமது மக்களின் நலன்பேணும் நோக்கில் பல்வேறுபட்ட காத்திரமான நடவடிக்கைகளை எனது நேரடிக் க்காணிப்பில் பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளது. கடந்த ஊரடங்கு தளர்வின் போது எமது பொதுச்சந்தைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சனநெரிசல் இருந்தமை கோரோனா தொற்று வேகமாக பரவக்கூடிய ஏதுநிலையை உண்டாக்கும் என்று சுகாதார தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சனநடமாட்டத்தையும் நெருசலையும் குறைப்பதற்கு நாம் சுகாதாரத் துறையினருடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதன்படி ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற போதே எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொலிஸாரின் அனுமதியுடம் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் கிராமச் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது. எனவே அத்தியாவசிய பொருள்கள் தேவையானவர்கள் மட்டும் குறித்த சந்தைகளுக்கு சென்று மரக்கறிகள் மற்றும் பலசரக்கு பொருள்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
நாளை முதல் கிராமச் சந்தைகள் இயங்க ஆரம்பிக்கும். சந்தைகள் இயங்கவுள்ள இடங்கள் பற்றி எமது சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முழுவதுமாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களான கையுறை மற்றும் முகக் கவசம்(மாஸ்க்) அணியாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எனக்கு அல்லது பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் உடனடியாக முறையிடுங்கள்.

அதுமட்டுமின்றி உங்கள் பகுதிகளில் மேலதிக அத்தியாவசிய வசதிகளோ சுகாதார வசதிகளோ ஏற்படுத்தப்பட வேண்டியேற்பட்டால் உடனடியாக 0777336361 என்ற இலக்கத்துடன் ஊடாக என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வலி. தெற்கு பிரதேச மக்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் குறிப்பிட்ட நாள்களுக்கு எமது வீடுகளை விட்டு வெளியேறாமல் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

அதேவேளை, நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு நுழைவாயில் வீதிகளில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இன்று பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பல் காரணமாக அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது, மக்கள் சந்தைகளில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய ஒன்றுகூடுகையில் அவர்களை சமூக இடைவெளியின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

அதனடிப்படையில் திருநெல்வேலி பொதுச் சந்தை இந்த இடர் காலங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சந்தையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம். சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களில் வியாபாரிகள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களை தங்களின் இடங்களிலோ அல்லது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும். பொது மக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறியைக் கொள்வனவு செய்து எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என்றும் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, வலி. தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் சந்தையில் கூடும் மக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை வியாழக்கிழமை தொடக்கம் கிராமிய சந்தைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தெரிவித்தார்.

அதனடிப்படையில் விவசாயிகள் தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளை தாமே விற்பனை செய்வதற்கு இதனமூலம் வழியமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்