ஊரடங்கு தளர்த்தப்படும்போது வவுனியாவில் விசேட நடவடிக்கை!!

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தளர்த்தப்படுகின்றது. எனவே அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரை நோக்கி அதிகளவில் வரும் நிலை காணப்படுகின்றது.

நேற்றைய தினமும் ஊரடங்குச் சட்டம் தளர்தப்பட்டபோது அதிகமான பொதுமக்கள் நகரை நோக்கி வருகைதந்தமையால் திட்டமிட்டவகையில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது. இதனால் வைரஸ் தாக்கம் இலகுவாக பரவக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் அந்தநிலை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தவகையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை தாங்களே எடுத்துவந்து விற்பனை செய்துகொள்ள முடியும். அதற்காக சில பகுதிகளை நாம் ஒதுக்கியுள்ளோம்.

காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாகவும், கொறவப்பொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் நகரில் சில்லறை மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளையும் அந்தப் பகுதிகளில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உத்தரவிடவுள்ளதுடன், மொத்த மரக்கறி விற்பனை சந்தையில் சில்லறை வியாபாரம் மேற்கோள்ளவும் தடைவிதிக்கப்படும்.

அத்துடன் அதிகமான சன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வீதிகளை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக சந்தைச் சுற்றுவட்ட வீதிக்குள் நுளையும் அனைத்து குறுக்கு வீதிகளையும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதற்குள் வாகனங்களில் பயணிப்பது முற்றாக அனுமதிக்கப்படாது.

அத்துடன் வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.


Recommended For You

About the Author: Editor