கொரோனா – பிரித்தானியாவில் அரைவாசிப்பேரைப் பாதித்திருக்கலாம்

உலகை வதைக்கும் கொரோனா வைரஸ் ஏற்கனவே பிரித்தானிய மக்கள் தொகையில் அரைவாசிப்பேரை பாதித்திருக்கலாம் எனவும் ஜனவரி மாதம் முதல் பிரித்தானியாவில் வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் ஒக்ஸ்ஃபேர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் (24.03.20) ஒரே நாளில் இறப்பு எண்ணிக்கை 89 ஆக உயர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,427 பேர் என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 424 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,077 பேராக அதிகரித்தது.

Covid-19 இன் தொற்று வீதம் குறித்து ஒக்ஸ்ஃபேர்ட் பல்கலைக்கழக தொற்றுநோயியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பேராசிரியர் சுனேத்ரா குப்தா தலைமை தாங்கியுள்ளார்.

இந்தக் குழுவின் கூற்றில், கொரோனா வைரஸ் ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களைத் தொற்றி இருக்கக்கூடும் எனவும் கடந்த ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பிரித்தானியாவில் வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதல் தொற்று ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பும், முதல் இறப்பு ஏற்பட்ட ஒரு மாதத்திற்கு முன்பும் இந்தப் பரவல் ஆரம்பித்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் பொருள், கொரோனோ வைரஸ் பிரித்தானியாவில் பரவலாகப் பரவுவதற்கு போதுமான நேரம் இருந்திருக்கலாம் என்பதுடன் பல பிரித்தானியர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆய்வை வழிநடத்திய தொற்றுநோயியல் கோட்பாட்டுப் பேராசிரியர் சுனேத்ரா குப்தா, கோட்பாட்டை மதிப்பிடுவதற்கு மேலும் பரிசோதனைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

“நாம் இப்போது தொற்றுநோயின் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை மதிப்பிடுவதற்கும், எந்தளவிற்கு தொற்று உள்ளதென்பதைக் கணிப்பதற்கும் நாம் பெரியளவிலான நுண்ணுயிரியல் ஆய்வுகள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்த சோதனைகள் என்பனவற்றை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என பேராசிரியர் சுனேத்ரா குப்தா தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஒரு NHS அறக்கட்டளையில் 21 பேர் உட்பட, பிரித்தானியாவில் ஒரே இரவில் 89 பேர் இறந்த பின்னர் இந்த ஆய்வு வெளிவந்திருக்கிறது. ஸ்கொட்லாந்து இரண்டு இறப்புகளையும் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றொரு மரணத்தையும் உறுதிப்படுத்தி இருந்தன.

இதற்கு நேர்மாறாக, பாதிக்கப்பட்ட ஐம்பத்து நான்கு பிரித்தானியர்கள் முதல் நாள் இறந்தனர். கடந்த வாரம் செவ்வாய் வரை வெறுமனே 71 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை ஒரு வார இடைவெளியில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (24.03.20) சாதனை அதிகரிப்பாகக் காணப்பட்டது. குறிப்பாக 1,427 பேரை வைரஸ் தொற்றிக்கொண்டது. இதனால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை 8,000 ஐத் தாண்டியது.

எனினும் மருத்துவமனையில் நோயாளிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முடிவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறது. உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சங்கள் என்ற (400,000) புள்ளியை நெருங்கக்கூடும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்