நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 904 பேர் மருத்துவ கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 904 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய நோய் தடுப்பு மையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொடர்பாக தேசிய நோய் தடுப்பு மையம் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதுவரை சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதில் அனுப்பப் பட்டிருக்கிறது.

போர்க்களத்தில் முன்னணியில் நிற்கும் போர் வீரர்கள் போல தேசிய நோய் தடுப்பு மைய ஊழியர்கள், விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்துநாட்டு மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் அவர்களுக்கு நன்றி” என கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்