உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது.

இதில் இத்தாலி ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து 176 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழப்பு மொத்தமாக 6 ஆயிரத்து 820 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்து மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள ஸ்பெயினில் நேற்று மட்டும் 680 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில், 6922 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2ஆயிரத்து 991ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் புதிதாக 11 ஆயிரத்து 89பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரேநாளில் மட்டும் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, பிரான்சில் 240 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1100ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 54ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரானில் நேற்று மட்டும் 122 பேர் உயிரிழந்துள்ளதுடன், பிரித்தானியாவில் 87 பேரும் ஜேர்மனியில் 36 பேரும் நெதர்லாந்தில் 63 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ள போதும் வைரஸ் பரவல் அதிகரிப்பதுடன் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் மோசமாக அதிகரித்துச் செல்கின்றது.

இதேவேளை, கட்டுக்கடங்காத வேகத்தில் வைரஸ் பரவுகின்ற நிலையில் உலக நாடுகள் தனிமைப்படுத்தலை கடுமையாகக் கையாள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்