ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தருணத்திலும் தேவைக்கேற்ப மருந்தகங்களைக் திறப்பதற்கு அனுமதியளிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதார அமைச்சினால் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் ஃபாமசிகளில் மருந்துகளைப் பெற்றுக் கொள்பவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, ஆராய்ந்து சுகாதார அமைச்சினால் வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து மருந்தகங்களையும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் தேவைக்கேற்றவாறு திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளிக்கத் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கின்போது மருந்து கொள்வனவு செய்பவர்களிடம் அதற்கான சீட்டினை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மருந்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor