நாடளாவிய முடக்கத்துக்கு தயாராகிறது தென் ஆபிரிக்கா

தென்ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 554 ஆக உயர்வடைந்தமையினை தொடர்ந்து, நாடளாவிய ரீதியான முடக்கம் திட்டமிடப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் 402 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சடுதியாக உயர்ந்து 554ஆக மாறியுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த முடக்கத்துக்கான ஆயத்தப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று (திங்கட்கிழமை) நாட்டு மக்களுக்கான உரை ஒன்றினை ஆற்றிய தென்ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 21 நாளைக்கு நாடளாவிய முடக்கம் ஏற்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

மேலும் உலகளாவிய ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள ஆபிரிக்க பொருளாதாரம், குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபிரிக்க துணைக்கண்டத்திலேயே அதிகளவிலான வைரஸ் தாக்கத்தினை கொண்ட நாடாக தென் ஆபிரிக்காவில் பதிவாகியுள்ள அதேவேளை, குறித்த வைரஸ் பரவ ஆரம்பித்தால் அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என பொது சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அந்நாட்டில் வைரஸ் தொற்றினை பரிசோதிப்பதற்கான அளவீடுகளை அதிகரிக்கவும், சுவாசக் கருவிகளுடன் பொருந்திய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்