றிஷாட்டுக்கெதிராக ரெலோ அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை பேணினார் என குற்றச் சாட்டுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன் பதவியில் இருக்கும் வரை அவருக்கு எதிரான விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க முடியாது என இரா.சம்பந்தன் கூறியுள்ள நிலையில், என்.சிறீகாந்தா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீனை விசாரணைக்கு உட்படுத்தும் விடயத்தில் சமரசத்திற்கோ விட்டுக்கொடுப்பிற்கோ இடமில்லை என்றும் வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாக வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், ரிஷாட் பதியூதீன் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளதாக என்.சிறீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீதும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பாகவும் தமது கட்சி இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாகவும் என்.சிறிகாந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor