பொன் மகளாய் வரும் ராட்சசி!

ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையாக பேசப்பட்டாலும் அரசு பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்பினைப் பெற்றது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது நடிக்கும் புதிய படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப்பின் திரைத்துறையிலிருந்து விலகிய ஜோதிகா கடந்த சில வருடங்களாக திரைத்துறையில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறார். தொடர்ந்து பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் திருமணமான பெண்களை மையப்படுத்தியே கதைகளையும் தேர்ந்தெடுத்துவருகிறார். பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படம் மட்டும் மற்ற படங்களைக் காட்டிலும் அவருக்கு ஆக்‌ஷன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைந்தது.

பொன்மகள் வந்தாள் திரைப்படமும் அத்தகைய பாணியில் உருவாகும் என்பதை போஸ்டரைப் பார்க்கும் போது உணரமுடிகிறது. சிறுவர்கள் பனை ஓலையில் செய்யும் காற்றாடியையும் துப்பாக்கியையும் போஸ்டரில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஃப்ரெட்ரிக் இயக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்க ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். தற்போது இதன் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.


Recommended For You

About the Author: Editor