கைவிடப்படுகிறதா வட சென்னை 2?

வடசென்னை திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தனுஷ் அதை மறுத்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்தின் பணிகள் மேற்கொண்டு நடைபெறவில்லை என்று தகவல் வெளியானது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை மூன்று பாகங்களாக உருவாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள கலவையான விமர்சனம் படக்குழுவை அடுத்த பாகம் உருவாக்கும் முயற்சியை தள்ளிப்போடவைத்ததாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டன.

வட சென்னை பகுதி மக்களை படம் தவறாக சித்தரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் படத்திற்கு எதிரான கருத்துக்கள் பரவத்தொடங்கின. இதனால் அதன் வசூல் பெருமளவில் பாதித்தது.

இப்படத்தில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் முக்கியமாக பேசப்பட்டது. அவரது தம்பிகளாலே அவர் கொல்லப்பட்டபிறகு தம்பிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது வட சென்னை படத்தின் திரைக்கதையில் முக்கியப்பங்கு வகித்தது. இதனால் பட ரிலீஸுக்குப் பின் வெற்றிமாறன் ராஜன் கதாபாத்திரத்தின் முன்கதையை ராஜன் வகையறா என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த சீரிஸ் மட்டும் வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்களில் கூறப்பட்டது. மேலும் வடசென்னை 2 கைவிடப்பட்டது எனவும், தனுஷின் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் நஷ்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திடீர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘எனது ரசிகர்களிடையே இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2 திரைப்படம் கைவிடப்படவில்லை. எனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திலிருந்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகாதவரை வதந்திகளை நம்பவேண்டாம். நன்றி’ எனக் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor