நெருப்போடு விளையாடாதீர்கள்: சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய தைவான் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 8ஆம் தேதியன்று அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்தது.

அதன்படி 108 ஜெனரல் டைனமிக்ஸ் கார்ப் M1A2T அப்ராம்ஸ் டேங்குகள், 250 ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்யவுள்ளது.

இந்த ராணுவ உபகரணங்களை ரய்தியோன் என்ற அமெரிக்க நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் கிழக்கு ஆசிய மண்டலத்தில் பாதுகாப்பில் எந்த சிக்கல்களும் ஏற்படாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டுமென்று சீனா வலியுறுத்தியுள்ளது. தைவான் அதிபர் த்சய் இங் வென் அரசு பயணமாக அமெரிக்கா சென்றதும் சீனாவுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க-தைவான் ஒப்பந்தம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் பேசுகையில், “சர்வதேச உறவுகளின் சட்டங்களையும், அடிப்படை விதிகளையும் அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் மீறியுள்ளது.

‘ஒரு சீனம்’ கொள்கையையும் இந்த ஒப்பந்தம் மீறியுள்ளது. எங்களது தேச நலனை பாதுகாக்க, தைவான் நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீன அரசு பொருளாதாரத் தடை விதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சீன தூதர் வாங் யி அரசு பயணமாக ஹங்கேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நெருப்போடு விளையாடக்கூடாது.

எந்த அந்நிய சக்தியாலும் சீனாவின் ஒருங்கிணைப்பை தடுக்க முடியாது. இவ்விவகாரத்தில் எந்த அந்நிய சக்தியும் தலையிடவும் கூடாது” என்று எச்சரித்தார்.

ஏற்கெனவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வர்த்தகப் போர் சூடுபிடித்துள்ள நிலையில் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின் வர்த்தகப் போர் தணியும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் கசப்புத்தன்மை உருவாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor