சென்னைக்கு கடத்தப்பட்ட 15 வயது பீகார் சிறுமி!

பீகார் மாநிலத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை, சென்னை போலீசாரின் உதவியுடன் பாட்னா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி சஜாதா காதுன் (sajada khatun), கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் காணாமல் போயுள்ளார்.

பள்ளிக்கு சென்ற சிறுமி திரும்பி வராததால் அச்சமடைந்த பெற்றோர்கள், அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிஷா குமாரி என்ற 18 வயது இளம்பெண் அழைத்து சென்றது தெரிய வந்தது.

இதனிடையே தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து, பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்த மணிஷா குமாரி டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கியுள்ளார்.

டிக்கெட் எடுக்காமல் பயணித்ததற்காக ரயில்வே போலீசில் ஒப்படைக்கப் போவதாக பரிசோதகர் கூறிய நிலையில், அச்சமடைந்த மணிஷா குமாரி ரயில் மெதுவாக சென்றுகொண்டிருந்த போது கீழே குதித்துள்ளார்.

இதில் காயமடைந்த அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் வெறும் 400 ரூபாய்க்கு சிறுமியை விற்பனை செய்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்தது.

சிறுமியை ஏமாற்றி செகந்திராபாத் அழைத்து வந்த மணிஷா குமாரி, அங்கு வைத்து பிரகாஷ் யாதவ் என்பவனிடம் 400 ரூபாய் வாங்கிக் கொண்டு, சிறுமியை விற்பனை செய்துள்ளார்.

பின்னர் பாட்னா திரும்பிக் கொண்டிருந்த போது தான் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கியுள்ளார்.

போலீசில் ஒப்படைத்தால் சிறுமியை கடத்தி வந்தது தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரயிலில் இருந்து குதித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செகந்திராபாத் விரைந்த பாட்னா போலீசார், அங்கு விசாரணை நடத்தியதில் பிரகாஷ் யாதவ் சிறுமியை சென்னை அழைத்து சென்றது தெரிய வந்தது.

சென்னை போலீசாரின் உதவியைக் கோரிய பாட்னா போலீசார், மணிஷா குமாரியிடமிருந்து பெற்ற பிரகாஷ் யாதவின் செல்போன் எண்ணை அளித்துள்ளனர்.

அதனை வைத்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், பிரகாஷ் யாதவ் பெரம்பூரில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை போலீசாரின் உதவியுடன் பெரம்பூரில் வைத்து பிரகாஷ் யாதவை பாட்னா போலீசார், கைது செய்தனர்.

மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில், கடத்திவரப்பட்ட சிறுமியை அன்சாரி என்பவனிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளான்.

ஆனால் அன்சாரி அதன் பின்னர் சிறுமியை என்ன செய்தான் என்பது குறித்தும், அவன் எங்கு உள்ளான் என்பது குறித்தும் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளான்.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோரும், பாட்னா போலீசாரின் ஒரு குழுவினரும் சென்னையில் முகாமிட்டு சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்றொரு குழுவினர் கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவை பாட்னா அழைத்து சென்றனர்.

இதனிடையே சிறுமி குறித்து தகவலறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சென்னை போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor