தமிழர் பூமியில் தடைகளை மீறி மலர்கிறது பௌத்த விகாரை! 📷

விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், தமிழர் தாயக பூமியான யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் அவசரமாக கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரையொன்று நாளை மறுதினமான சனிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்படவுள்ளது.சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.

புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை வெள்ளிக்கிழமை குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை 08 மணிக்கு வாகன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்றைய தினம் இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை 5 மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையும்.
இதில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த விகாரையை நிர்மாணிப்பதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இருந்த போதிலும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor