புலிகளிடமிருந்து படியுங்கள் – முன்னணிக்கு சுரேஸ் ஆலோசனை

முரண்பாடுகளைக் கருத்திற் கொள்ளாது காலத்தின் தேவைக்கேற்ப கூட்டணியின் தேவை கருதி தமிழீழ விடுதலைப் புலிகள் கூட்டமைப்பை உருவாக்கியது போலவும், அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தந்தை செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இணைந்து கூட்டணியை உருவாக்கியது போலவும் இன்றைய சூழலில் அவ்வாறானதோர் கூட்டு தேவைப்பட்டிருக்கின்ற நிலையில் இந்தப் பாடங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், குறுகிய கட்சி நலனைப் முதன்மைப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் அது தமிழ் மக்களுக்கும் ஆரோக்கியமானதல்ல எனவும் முன்னணிக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.

யாழ்.கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை தேவை என்பது தமிழ் மக்களால் உணரப்பட்டு வந்தது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணையை மீறி மக்களின் அடிப்படை விடயங்களை மறந்து செயற்பட்டு வருகின்றது. இந்தவகையில் மாற்றுத் தலைமை தொடர்பான பல்வேறு பேச்சுவார்த்தைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்று வருகின்றது.

இதன்பால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலமையில் ஒரு புதிய அணியை உருவாக்குவது என்பது தொடர்பில் கூட பல பேச்சுக்கள் நடந்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும், அமைப்புக்களையும் அடிப்படையாக கொண்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்று அமைய வேண்டும் என்றும், அவ்வாறான ஒரு கூட்டணி உருவானால் மட்டுமே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.

இந்தவகையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியமக்கள் முன்னணிஉள்ளிட்ட சிவில் அமைப்புக்களை உள்ளடக்கியதாக புதிய அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் பலசுற்றுப் பேச்சுக்களும் நடந்துள்ளது. இவ் புதிய கூட்டணிக்கான ஆதரவினை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது.

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இப் பேச்சுக்களில் நாட்டம் செலுத்தவில்லை. தமிழ் தேசியமக்கள் முன்னணி விக்னேஸ்வரனுடைய கட்சியுடன் இணைய முடியுமே தவிர வேறு யாரும் அதில் சேர்த்துக் கொள்ள முடியாது என்ற விடயத்தில் உறுதியான கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இருப்பினும் விக்னேஸ்வரன் தமிழ் தேசியமக்கள் முன்னணியினரை புதிய பரந்த கூட்டில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தியபோதும், முன்னணியினர் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தினையும் அல்லது சமரசத்தினையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மாற்றுக் கூட்டில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்ற போக்கில் உள்ளார்கள் என்பது தற்போது வெளிப்படையாக தெரிகின்ற விடயமாக உள்ளது.

தமிழ் மக்களுக்குத் தேவையாக மாற்றுதலைமை ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று தமிழ் மக்களுடைய நீண்டகால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என்பதுவே எமது விரும்பம். கொள்கைவழியில் தமிழ் மக்களின் நலன்களின் அக்கறை கொண்டு இணைய கூடிய சகல தரப்புக்களையும் உள்ளடக்கிதாக இந்த மாற்றுத் தலைமை அல்லது மாற்றுஅணி இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பல தரப்புக்கள் மிக நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள். இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் பின்னரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணங்கி வராத நிலையில், புதிய மாற்று அணியில் இணையக் கூடிய அனைவரும் இணைந்து பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

ஆகவே மக்கள் நலனை புறந்தள்ளி குறுகிய கட்சி நலன்களை முதன்மைப்படுத்துவது இந்த காலகட்டத்திற்கு பொருத்தமானதாக இருக்காது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனித்து நின்று அரசியல் செய்வதற்கு எந்த காலத்திலும் விரும்பியது கிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முரண்பாடுகளை கருத்தில் கொள்ளாது ஒரு கூட்டு அணியின் தேவையை புரிந்துகொண்டு அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார்கள். இதேபோன்றுதான் தந்தை செல்வா மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்களும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டார்கள்.
ஆனால் இன்றிருக்க கூடிய ஒரு இளையவர்கள் என்று செல்லக்கூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் இந்த பாடங்களை புரிந்துகொள்ள வேண்டும். கட்சி நலனை முன்னிறுத்தி பேசுவதோ அல்லது செயற்படுவதோ ஆரோக்கியமானதாக இருக்காது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: ஈழவன்