இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நியுசிலாந்து

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. அந்த அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இந்திய அணியின் பேட்டிங், குறிப்பாக டாப் ஆர்டர் மொத்தமாக கைவிட்டது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி பேட்டிங் செய்யும் போதே ஆடுகளம் மந்தமாக இருந்தது. துவக்க வீரர் மார்டின் குப்டில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதன் பின் மூத்த வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 15 ஓவர்களில் ரன் குவிக்கும் அவசரத்தில் நியூசிலாந்து அணி விக்கெட்களை விரைவாக இழந்தது.

அந்த அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை காரணமாக போட்டி தடைபட்டது.

பின்னர் போட்டி மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எங்கே போட்டி நிறுத்தப்பட்டதோ அதே கட்டத்தில் மீண்டும் தொடங்கியது.

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து 50 ஓவர்களில் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சாஹல் (10 ஓவர்களில் 63 ரன்கள்) தவிர்த்து அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். பண்டியா 55 ரன்கள் கொடுத்தார். பும்ரா 3, புவனேஸ்வர் குமார் 1, பண்டியா 1, ஜடேஜா 1, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா எளிதாக வெற்றி பெறும் என கருதிய நிலையில் துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா, கோலி, ராகுல் – மூவரும் 1 ரன் எடுத்து நடையைக் கட்டினர். இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

அடுத்து தினேஷ் கார்த்திக் 6, பண்டியா 32, ரிஷப் பண்ட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வந்த தோனியும், அவருக்கு பின் வந்த ஜடேஜாவும் அணியை மீட்டு, வெற்றிக்கு போராடினர்.

கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது போட்டி. அப்போது இரு அணிகளுக்கும் வாய்ப்பு இருந்ததால், போட்டி விறுவிறுப்பை அடைந்தது. ஜடேஜா அரைசதம் அடித்து அபாரமாக ஆடினார். எனினும், 77 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 13 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தது.

49வது ஓவரில் தோனி அரைசதம் அடித்து ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து புவனேஸ்வர் குமார் டக் அவுட் ஆக, இந்திய அணியின் தோல்வி உறுதி ஆனது. கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், சாஹல் அந்த ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்தார். எனினும், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததே வெற்றிக்கு மிக முக்கிய காரணம். பவுல்ட் 2, ஹென்றி 3, சான்ட்னர் 2, பெர்குசன் 1 நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Recommended For You

About the Author: Editor