மூடப்பட்டது ருஹுண பல்கலைக்கழகம்

மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ருஹுண பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், மாணவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ருஹுண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்றுள்ளனர்.

பின்னர் மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. இதன்போது காயமடைந்த 12பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கல்விசாரா ஊழியர்கள் சிலரும் உள்ளடங்குவதால் ஏனைய ஊழியர்கள் மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் இதன்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சேவையில் ஈடுப்பட்டிருந்த ஏனைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மாணவர்கள் தாக்க முற்பட்டதால் அவர்கள் கடமையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor