அகதிகளைத் தடுக்க புதிய யுக்தி!!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு வாகனங்களில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்ற சுமார் 800 பேர் சோதனைச் சாவடியில் சிக்கியுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்புக்காக ஆண்டுதோறும் அமெரிக்காவில் குடியேறிவருகின்றனர்.

இவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறுவதாகக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதைத் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக மெக்ஸிகோ- அமெரிக்கா இடையே பிரமாண்ட சுவர் எழுப்பத் திட்டம் தீட்டினார்.

ஆனால், அவரின் முடிவுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, செனட் சபை ட்ரம்ப்பின் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் அகதிகளிடமிருந்து குழந்தைகளைப் பிடித்து வைத்தல், எல்லையில் கண்ணீர் புகைக்குண்டு வீசுதல் என அகதிகளின் வருகையைத் தடுக்க ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார்.

இருந்தாலும் அகதிகள் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் வந்துக்கொண்டே உள்ளனர்.

இப்படிப் பல பிரச்னைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த மாதம், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களைத் தடுக்கும் விதமாக மெக்ஸிகோவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன.

அதன்படி அமெரிக்காவுக்குள் நுழைபவர்களைத் தடுக்க மெக்ஸிகோ அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த இரு தினங்களாக, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 200-க்கும் மேற்பட்ட அகதிகளைச் சிறை பிடித்துள்ளது மெக்ஸிகோ அரசு.

எல்லையில் நடந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் சில சரக்கு லாரியில் நடந்த சோதனையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

ஒரு வாரத்தில் வாகனங்கள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அனைத்து அகதிகளும் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் குளிர்பான ட்ரக்குகளில் மறைந்திருந்த அகதிகள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என மெக்ஸிகோ பாதுகாப்புத்துறை அமைச்சரவை விளக்கியுள்ளது.

சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுத்த காரணத்தினால்தான் தொடர் சோதனை வேட்டையில் தாங்கள் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்கா செல்லும் அனைத்து வாகனங்களும் அங்குள்ள சோதனைச்சாவடியில் நிற்கின்றன.

அப்படி நிற்கும் வாகனங்கள அனைத்தும் அதிநவீன எக்ஸ்ரே இயந்திரம் மூலம் சோதனையிடப்படுகின்றன.

இந்த இயந்திரம் ட்ரக்குகளில் என்னவெல்லாம் உள்ளது என்பதை அப்படியே கறுப்பு வெள்ளையில் படமெடுத்துக் காட்டிவிடுகிறது.

இதை பயன்படுத்தித்தான் ட்ரக்குகளில் ஒளிந்திருக்கும் அகதிகளை நாங்கள் கண்டுபிடித்தோம் என மெக்ஸிகோ தெரிவித்துள்ளது.

முன்னாள் சிறைக் காவலராக இருந்த ஃப்ரான்சிஸ்கோ கார்டுனோ ( Francisco Garduno) என்பவர் தற்போது மெக்ஸிகோவின் குடியேற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃப்ரான்சிஸ்கோ மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரின் பதவிக்காலம் முடிந்த பின்பும் அவருக்கு மீண்டும் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கௌதம்மாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒருவர்கூட அமெரிக்காவுக்குள் நுழையவே கூடாது எனக் கடந்த மாதம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் மெக்ஸிகோ சோதனைச் சாவடியில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor