5ஜி கோபுரத்திற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை

இலங்கையில் எந்தவொரு பகுதியில் 5ஜி அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவதற்கோ அல்லது அதற்கான கோபுரத்தை அமைப்பதற்கோ அனுமதி கோரப்படவும் இல்லை – அதற்கான அனுமதி வழங்கப்படவும் இல்லை என்று தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தி தகவல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் 5ஜி கோபுரம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குழப்பநிலை நீடிக்கும் நிலையில் அதுதொடர்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முதல் அனுமதியை வழங்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பேராசிரியர் ஒருவர் தகவல் கோரியிருந்தார்.

பேராசிரியரின் விண்ணப்பத்துக்கே தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது.
இதுதொடர்பான தகவலை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு இன்று (ஜூலை 08) திங்கட்கிழமை பேராசிரியருக்கு அனுப்பிவைத்துள்ளது

மேலும் 5ஜி அலைக்கற்றை கோபுரங்களை அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்தவொரு முறைப்பாடும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நேரக்கட்டுப்பாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையின் கீழ் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் ஸ்மாட் போல் கம்பங்கள் அமைச்சரவையின் அனுமதியுடனேயே இடம்பெறுகின்றன என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் அமைச்சரவையின் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தீர்மானம் பின்வருமாறு:

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு
வீதிகளுக்கு ஔியூட்டுவதற்காக L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டம் தற்போதுள்ள சம்பிரதாய வீதி மின்விளக்குகளுக்குப் பதிலாக வீதிகளுக்கு ஒளியூட்டுவதற்காக L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று கொரிய ரெலிகொம் கம்பனியினால் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரேரிப்பு தொடர்பில் ஆராய்ந்து விடயங்களை முன்வைப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது.

உத்தேச கருத்திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகள் அதேபோன்று இந்த முறைமையை பயன்படுத்தி கொழும்பு நகரம் அடங்கலாக பிரதான சில நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதற்கு கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்தும் முறைமையினை தாபித்தல், பொதுமக்களுக்கு பயன்படுத்தக்கூடிய அருகலை (Wifi) வசதிகளை வழங்குதல் போன்ற நன்மைகள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஒளியூட்டுவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சம்பிரதாய வீதி மின்விளக்குகளுக்குப் பதிலாக வினைத்திறன்மிக்க L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டத்தை கொரிய ரெலிகொம் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது – என்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் ஸ்மாட் போல் (Smart Pole) கம்பங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை தமக்கு வழங்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்