வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்-வைக்கோ!!

என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்என வைக்கோ அவர்கள் திண்டுக்கல் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கம் வருமாறு:
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு பேசினார்.
‘நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக விரும்பியதன் பேரில், அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆக, நான் போட்டியிடுவதாக இருந்தால்தான் ஒரு மக்கள் அவைத் தொகுதி, ஒரு மாநிலங்கள் அவை இடம் என்பது, மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம்; இல்லையேல் பேச்சுவார்த்தை வேறு விதமாகச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.
இது எழுதப்படாத ஒப்பந்தம். எனவே, தேர்தல் உடன்பாட்டில் இதை நாங்கள் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், என் மீது 124எ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தண்டனை வராது என்று நான் நம்பியது உண்மை. காரணம், இந்திய விடுதலைக்கு முன்பு, மகாத்மா காந்தி அவர்களும், பாலகங்காதர திலகர் அவர்களும் இதே பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். திலகர் இரண்டு முறை தண்டிக்கப்பட்டு, இரண்டாவது முறை ஆறு ஆண்டுகள், பர்மாவில் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அத்தனைத் தலைவர்களும், பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னார்கள். சுதந்தரத்திற்குப் பிறகும்கூட ஒரு கட்டத்தில் நேரு அவர்கள் சொன்னார்கள். ஆனால் நீக்கப்படவில்லை.
சட்ட மாற்றங்களைப் பற்றி ஒரு ஆணையம் பரிந்துரை செய்கின்றபோதுகூட, ராஜதுரோகக் குற்றச்சாட்டு என்கின்ற 124எ என்பது நீக்கப்பட வேண்டும் என்றுதான் சொன்னார்கள். நீக்கப்படவில்லை. ஆனால், இந்திய விடுதலைக்குப் பிறகு, இன்றுவரை, இந்தியாவில் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் விடுதலை ஆயிற்று.
ஆனால் என் மீதான வழக்கில், 5ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட தீர்ப்பில், எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின்னர், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். அதேபோல, விடுதலைக்குப் பிறகு, தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவனாகவும் நான் இருக்கிறேன்.
நான் என்ன தேசத் துரோகம் செய்தேன்?
மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள், அந்த உருவத்தைக் காலில் போட்டு மிதித்துத் தீவை வைத்துக் கொளுத்தியவர்கள், தேச பக்தர்களாக இருக்கின்றார்கள்.
காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சேவுக்கு ஊருக்கு ஊர் சிலை எழுப்ப வேண்டும் என்று சொல்பவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள்.
நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1) பிரிவின் கீழ் வரக்கூடிய குறிப்பிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ், போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ், பெண்களுக்குக் கேடு செய்யும் பிரிவுகளின் கீழ், மதப் பிரச்சினைகளின் மூலமாக வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலோ, வெறும் அபராதம் ஏற்பட்டலோகூட அவர்கள் போட்டியிட முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8 பிரிவு 2இன் கீழ் இந்தந்தப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் போட்டியிட முடியாது.
சில வழக்குகளில் 100 ரூபாய் அபராதம் விதித்து இருந்தாலே போட்டியிட முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8, 3ஆவது பிரிவு என்பது எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதற்கு மேல் தண்டிக்கப்பட்டால் போட்டியிட முடியாது. இப்படித்தான் சட்டம் மிகத் தெளிவாக இருக்கின்றது. எனவே என்னுடைய வேட்புமனு நிச்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.
இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினேன். ‘நீங்கள் நிற்பதாக இருந்தால்தான் மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் என்ற நிபந்தனையின் பேரில் நீங்கள் தந்தீர்கள். ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டு, அதனால் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுமானால், அதற்கு உரிய மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்துகொள்ளுங்கள்’ என்று, நான்தான் தளபதி ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்திக் கூறினேன்.
இப்பொழுது, என்னுடைய வேட்பு மனுவை ஏற்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்பதாக ஒரு செய்தி உலவுகின்றது. அது உண்மையா? பொய்யா? என்று எனக்குத் தெரியாது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்கூட, முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோ அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றார்கள். நாளைய தினம் மனு பரிசீலனை நடைபெறுகின்றது. நான் மறுபரிசீலனைக்குப் போக முடியாது. காரணம், அதே நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இவர்களுக்கான வழக்கு விசாரிக்கக்கூடிய மாண்புமிகு நீதிபதி சாந்தி அவர்கள் நீதிபதியாக இருக்கக்கூடிய நீதிமன்றத்தில், மற்றொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. எனவே, அன்று காலை 10.30 மணிக்கு அந்த நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, வேட்பு மனு பரிசீலனைக்கு என்னுடைய பிரதிநிதியாக வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் செல்வார்கள்.
அந்தப் பரிசீலனையில் என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று தகவல் சொல்லப்படுகின்றது.
எனவே இதுகுறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களோ, நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி கடந்து என் மீது அன்பும், நல்லெண்ணமும் கொண்டவர்கள் மனதில் கவலையை ஏற்படுத்தி இருப்பதால், தேவையற்ற விவாதங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் அவசர அவசரமாக செய்தியாளர்களையும், தொலைக்காட்சி ஊடக நண்பர்களைச் சந்திக்க விரும்பினேன். தகவல் கொடுத்த 15 நிமிட காலத்துக்குள் நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
08.07.2019


Recommended For You

About the Author: Editor