கொரோனா – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது.

அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வின் ஊடாக கண்டறிப்பட்டது.

கொரோனா வகையைச் சேர்ந்த குறறித்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை காவு கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளமையினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவதாக சீன அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து, குறித்த வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும், கொரோனா என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த குறித்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என உலக சுகாதார அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

அத்துடன், உலகம் முழுவதும் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் கொவைட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில், கொவைட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் கடுமையான பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்தில் வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஹூபேயில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொவைட் -19 என்ற ‘கொரோனா’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்