367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு சபையில் சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாயினை செலுத்தும் வகையில் இந்த மதிப்பீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்தது.

சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி தயார் செய்யப்பட்டுள்ளதோடு இதற்கு சட்ட மாஅதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

கடந்த அரசாங்கம் கம்பெரலிய, கமநெகும, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், நெடுஞ்சாலை திட்டம், போன்ற திட்டங்களை செயற்படுத்தியது. ஆனால் 2019 இறுதியில் அதற்கு நிதி வழங்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி வழங்கும் நோக்கில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிரணி ஆதரவு வழங்குமென எதிர்பார்க்கிறோம். இதற்கான நிதி செலுத்துவது எமது பொறுப்பல்ல இருந்தாலும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்குவதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கிறோம்.

இதற்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்ததும் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்க முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்