எம் அடையாளங்கள் அழிப்பதை நாம் அனுமதிக்க கூடாது!

அடையாளங்களையும், தனித்துவத்தையும் தன்னகத்தே கொண்ட,எதிர்கால சந்ததியினருக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் முன்னெடுத்துச்செல்லக்கூடிய உயரிய ஆசிரிய பயிலுனர் மாணவர்களால் நாம் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக திகழ்ந்தவர்கள், இன்னும் திகழ்கிறவர்கள் தான்,

எந்த அரசாங்கமாக இருந்தாலும் இதனை மறக்கவோ மறுக்கவோ முடியாது என்பதனை உணர்த்தி எம் மலையக தோட்ட தொழிலாளரின் அடையாளமாக ஒரு சிலையை வடிவமைத்து ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் சிலையை வடிவமைத்து கண்காட்சியில் காட்சிப்படுத்தும் வரை யாருக்கும் எதுவும் வராத ஆணைகள் உத்தரவுகள் எல்லாம் காட்சிப்படுத்த ஆரம்பித்த பின்னர் திடீரென வந்து சிலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்களாம்.

எடுத்த எடுப்பிலேயே இந்த சம்பவத்தில் எவ்வாறான வகையில் அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் என்பதனை எம்மால் உணர்ந்துகொள்ள கூடியதாக இருக்கிறது.

அரசியல் வங்குரோத்து அடைந்த ஒரு சிலரால் தோட்டங்களுக்குள்ளேயே அரசியல் செய்ய முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ் நிலையில் எம் மக்களது குறிப்பாக மாணவர்களது உணர்வுகளூடாக தம் இயலாமையை மறைத்து அரசியல் செய்ய நினைப்பது எத்தகைய கோழைத்தனமான செயலாகும். இதனை எம் மலையக மக்கள் சார்பில் ஒரு மலையக பெண்ணாக நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளும் இவ்வாறான செயல்களால் எம்மவர் மத்தியிலும் குழப்பங்களை விளைவித்து ஏனைய சமூகங்கள் மத்தியிலும் எம்மை தலைகுனியச்செய்யும் இவ்வாறான செயல்களை செய்பவர்களுக்கு நாம் இனிவரும் காலங்களில் தக்க பாடத்தை புகட்டுவோம்.


Recommended For You

About the Author: Editor