எழுவர் விடயத்தில் ஆளுநர் இனியும் தாமதிக்கக் கூடாது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும் என, பா.ம.க நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இராமதாஸ் இன்று (வியாழக்கிழமை)  வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், மகிழ்ச்சியான முடிவை நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

29 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் காலவரையின்றி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வாகும்.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஆளுநரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்க முடியும்.

ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுநருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால்தான், ஆளுநரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் ஆளுநருக்கு மற்றொரு உண்மையையும் நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரைகள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், இதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உணர்வை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புரிந்துகொள்ள வேண்டும்.

7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், அதற்கும் கூடுதலாக 29 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில்தான், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்