பேருந்து சாரதியிடம் நியாயம் கேட்டவர் கைது.

விபத்தினை ஏற்படுத்தும் விதமாக பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை வழிமறித்து நியாயம் கேட்டவர் மீது சாரதி தாக்குதலை மேற்கொண்டதுடன் , நியாயம் கேட்டவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.
சாரதியின் பொய் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட கிளிநொச்சி பொலிசார் நியாயம் கேட்டவரை கைது செய்து பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நேற்று புதன்கிழமை இரவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை அதன் சாரதி மிக வேகமாக செலுத்தி வந்துள்ளார்.
அதன் போது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை மோதி தள்ளும் விதமாக பேருந்து வந்த போது , சுதாகரித்துக்கொண்ட மோட்டார் சைக்கிள்  ஓட்டி  வீதியை விட்டு விலகி ஓரமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார். அதனால் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.
அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் ஓட்டி வீதியால் வந்து கொண்டிருந்த போது பயணி ஒருவரை இறக்கி விட்டு பேருந்து மீண்டும் வேகம் எடுப்பதனை அவதானித்த மோட்டார் சைக்கிள் ஓட்டி பேருந்தை வழிமறித்து நியாயம் கேட்டுள்ளார்.
அதனால் சாரதிக்கும், அவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. வாய் தர்க்கம் உச்சமடைந்ததை அடுத்து சாரதி மோட்டார் சைக்கிள் ஓட்டி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
சாரதியினால் தாக்கப்பட்ட நபர் , தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் முறைப்பாடு செய்யும் நோக்குடன் சென்றுள்ளார். அதன் போது சாரதியும் பொலிஸ் நிலையம் வந்து , தன் மீது இவரே தாக்குதல் மேற்கொண்டார் என பொய் முறைப்பாட்டை பொலிஸ் நிலையத்தில் வழங்கினார்.  குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் ஓட்டியை பொலிசார் கைது செய்தனர்.
அதே நேரம் சாரதி பொய் முறைப்பாடு வழங்கியுள்ளார். எனவும் தன் மீது சாரதி தாக்குதல் மேற்கொண்டதற்கு எதிராக தனது முறைப்பாட்டை ஏற்குமாறு அவர் கூறினார். அதனை பொலிசார் மறுத்து முறைப்பாட்டை ஏற்காமல் அவரை பொலிஸ் காவலில் வைத்தனர். அவ்வேளை சாரதியின் தாக்குதலால் தனக்கு சுகவீனம் ஏற்பட்டு உள்ளதாகவும் . தன்னை வைத்திய சாலையில் அனுமதிக்குமாறும் கேட்ட போதும் பொலிசார் அதனை ஏற்காது பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறி பொய் முறைப்பாட்டை வழங்கி விட்டு சாரதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்று தொடர்ந்தும் தாமே பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் பக்க சார்பாக நடந்து கொண்டமை தொடர்பிலும் விபத்தினை ஏற்படுத்தும் விதமாக பேருந்தினை செலுத்திய சாரதி மீது நடவடிக்கை எடுக்காது நியாயம் கேட்டவர் மீது நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்