பிரதமரின் இந்திய விஜயம் அவசியமானதா என ஐ.தே.க கேள்வி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பிரதமரின் இந்திய விஜயம் அவசியமானதா என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தன்னுடன் மேலும் பலரை அழைத்துச் சென்றிருந்தார். இந்தியாவிற்கு சென்று யாத்திரைகளிலும் ஈடுபட்டார். மஹிந்தவின் இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இவ்வாறான விஜயம் அவசியமானதா?, இதேவேளை இலங்கையின் சர்வதேச கடன்களை செலுத்துவதற்காக தமக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவே இவர் அங்கு சென்றுள்ளார். இது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது வீட்டிலுள்ள பிரச்சினைகளை அயல் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தை கொண்டுள்ள எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், மஹிந்தவின் செயற்பாட்டால் நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்