பல்கலை மாணவன் வீடு மீதான தாக்குதலுக்கு ஆவா குழு உரிமை கோரியது.

பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு ஃபேஸ்புக்  ஊடாக உரிமை கோரியுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது  வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள சி.சி.ரீ.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று  (புதன்கிழமை) ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி ஃபேஸ்புக்கில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தமது ஃபேஸ்புக்கில் “தமிழர்களின் அடையாளமாகக் காணப்படும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையிலேயே சமீபத்தில் நடைபெற்ற மாணவிகளுக்கு எதிராக பகிடிவதை மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை இனிவரும் காலங்களில் தொடரும் என பதிவிட்டுள்ளனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்