அரசியலுக்கு வரும் பார்த்திபன்?

விரைவில் அரசியலுக்கு வந்தாலும், வருவேன்’ என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் ‘கிறுக்கல் கவிதை’ மற்றும் ‘கதை- திரைக்கதை-வசனம்-இயக்கம்’ திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா பிப்ரவரி 12 நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்துகொண்டார்.

புத்தக வெளியீட்டிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியதற்கு தமிழக அரசிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட ஒரே திரைப்பட நடிகர் என்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும் ‘நாம் நூறு வருடங்களாகத் தான் இந்தியர்களாக உள்ளோம். ஆனால் ஆயிரம் வருடங்களாகத் தமிழனாகவே இருக்கிறோம்’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘தமிழக அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அதனால் நான் கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.’ என்று தனது வழக்கமான கிண்டல் தொனியில் பதிலளித்தார்.

இரு வருடங்களுக்கு முன்னதாக சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற ‘பிளாஸ்டிக் இல்லா கடற்கரை’ நிகழ்ச்சியில் பங்குபெற்றபோதும், “அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர்கள் வரவேண்டும். நானும் வருவேன்” என்று பார்த்திபன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா


Recommended For You

About the Author: Editor