விக்கி – கஜன் கூட்டு தோல்வி ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக புதிய அரசியல் கூட்டணி ஒன்றினை அமைப்பதற்காக அண்மைய சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் புதிய கூட்டணி தொடர்பான இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இருதரப்பும் நேற்று நண்பல் இணக்கப்பாட்டிற்கு வந்ததாகவும் அதனடிப்படையில் இன்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியினர் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

உத்தியோகபூர்வ சந்திப்பினையடுத்து இருதரப்பினரும் இணைந்து புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பினை விடுவிப்பதாகவும் ஏற்பாடுகள் தடல்புடலாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிற்பகல் சி.வி.விக்கினேஸ்வரனிடமிருந்து இரு தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தரப்பிற்கு அதிர்ச்சிகரமாக தகவல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிய சில நிபந்தனைகளுக்கு தம்மால் உடன்பட முடியாதுள்ளதாகவும் எனவே கூட்டணி தொடர்பான பேச்சுக்களை முடித்துக்கொள்வதாகவும் நாளைய (இன்று) சந்திப்பினை நிறுத்துவதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இருதரப்பு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக செயற்பட்ட புலம்பெயர் தரப்புக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இரு தரப்பும் சில விடயங்களில் முரண்டுபிடிப்பதாகவும் இரு தரப்பிற்குமிடையில் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அறவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் இவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் விசனமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவியபோது, சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கு தாம் விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டே நாளைய (இன்று) சந்திப்பிற்கும் கூட்டணி பற்றிய அறிவிப்பிற்கும் விக்கினேஸ்வரன் உடன்பட்டதாகவும் எனினும் மாலை வேளை அவர் திடீரென பல்டி அடித்துவிட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பில் முழுமையான விபரங்களை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உத்தியோக பூர்வமாக வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்