அவுஸ்ரேலியாவில் கடும் மழை: காட்டுத் தீ அணைந்தது

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளதால், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அணைந்துள்ளது.

சிட்னி நகரில் கடந்த 4 நாட்களில் 391.6 மி.மீ. மழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடந்த மாதங்களாக காட்டுத்தீயினால் கடும் இழப்புகளை சந்தித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, நியூ சௌத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் மோரிஸ் கூறுகையில்,
”அவுஸ்ரேலியாவின் 30 இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. எதிர்வரும் நாட்களில் கனமழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வார இறுதிக்குள் அனைத்து காட்டுத்தீயும் அணைந்துவிட வாய்ப்புள்ளது” என கூறினார்.

கனமழை காரணமாக சிட்னி நகரில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் வீசிய சூறாவளி காரணமாக பல மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து எரிந்த காட்டுதீயால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்;. மேலும் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

10 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கு இரையானது. மேலும், சுமார் ஒரு பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்