பிரபாகரனே தேசிய தலைவர் – விஜயகலாவுக்கு ஐங்கரநேசன் பதிலடி

தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று கிளைத்துப் பரவியுள்ளவை. அந்தவகையில் சுற்றுச் சூழலைத் தவிர்த்துவிட்டு, சூழலியம் என்ற கோட்பாட்டைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு நேற்றுச் சனிக்கிழமை (06) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்குஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு இனம் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் அந்த இனத்தின் தேசியச் சூழல் ஆகும். சிங்கள மக்களின் தேசியச் சூழலும் தமிழ் மக்களின் தேசியச் சூழலும் வேறுவேறானவை. சிங்கள மக்களின் தேசியச் சூழலில் மழைக்காடுகள் இருக்கின்றன. எங்களது தேசியச் சூழலில் உலர்காடுகள் இருக்கின்றன. அங்கே கபரக்கொய்யா இருக்கின்றது. இங்கே உடும்பு இருக்கின்றது. அங்கே இரத்தினக்கல் விளைந்துள்ளது. இங்கே இல்மனைட் மணல் கொட்டிக் கிடக்கின்றது. எங்களுக்குப் பனை, அவர்களுக்கு கித்துள். அவர்களுடைய சூழல் பற்றிய போதுமான அறிவு எங்களுக்கோ, எங்களுடைய சூழல் பற்றிய அறிவு அவர்களுக்கோ இருக்க முடியாது. அந்த வகையில் எங்களுடைய தேசியச் சூழலை, எங்களுடைய தாயகத்தை ஆட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தேசிய மரமாகத் தனது தேசியச் சூழலில் அதிகம் காணப்படும் நாக மரத்தையே தெரிவு செய்து வைத்திருக்கின்றது. கௌதம புத்தருக்குரிய மரமாக இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். தேசிய மலராகப் பௌத்தத்துடன் அதிகம் தொடர்புபட்ட நீலோற்பலத்தை தெரிவு செய்திருக்கின்றார்கள். இலங்கைத் தீவில் ஒருபோதும் வாழ்ந்திராத சிங்கத்தை மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தேசியக்கொடியில் வாளேந்த வைத்திருக்கின்றார்கள். இந்தத் தேசிய அடையாளங்களின் தெரிவின் போது தமிழ் மக்களின் தேசியச் சூழல் கருத்தில் எடுக்கப்படவில்லை.

தேசிய அடையாளங்கள் யாவும் ஒரு நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒருங்கிணைக்கும் வசியக் குறியீடுகளாக இருத்தல் வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் இதனைச் செய்யத் தவறியது. இதனாலேயே விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் தேசியச் சூழலில் இருந்து தேசிய மலராகக் கார்த்திகைப்பூவையும், தேசிய மரமாக வாகை மரத்தையும், தேசியப் பறவையாகச் செண்பகத்தையும் தெரிவு செய்ய நேர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.

தேசிய விடுதலை போராட்டம் அஞ்சலோட்டம் போன்றது. பிரபாகரன் தான் போராடும் போது, தானே இந்த போராட்டத்தை முடித்து வைத்திருப்பேன் என நினைத்திருக்க மாட்டார். தான் முடிசூட வேண்டுமென அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. தமிழ் முடிசூட வேண்டுமென்றுதான் அவர் விரும்பினார். முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராட்டத்தை கொண்டு செல்லுமென நினைத்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை செய்யவில்லை.

ஒரு போராட்ட இயக்கம் யுத்தகளத்தில் நின்று சமாதானம் பேச முடியாது. அதற்கான வேறு இடங்களும் களமும் உள்ளது. ஒரு சிறுபான்மை தரப்பின் போராட்ட அமைப்பு, அரசாங்கத்துடன் போராடும்போது சில தவறுகள் நிகழலாம். ஆனால் அந்த தவறுகளை அரசாங்கத்தின் தவறுகளுடன் சமப்படுத்த முடியாது. ஆனால், எமது தமிழ் தலைமைகள் இதைத்தான் செய்தார்கள். சர்வதேச அரங்கில் இதை செய்து, போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தை பிணையெடுத்து விட்டார்கள்.

எவ்வாறு இரட்டை கோபுர தாக்குதல் உலகெங்கும் சிறுபான்மையினங்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டதோ, அதேபோன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஜனநாயகரீதியாக முன்னெடுக்கவும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு, இவ்வளவு காலநீடிப்பை வழங்கிய தமிழ் தலைமைகளே பொறுப்பாளிகள் ஆவர்.

அமைச்சர் விஜயகலா அவர்கள், பலாலி விமான அவிபிருத்தி தொடக்க நிகழ்வில், எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என சொல்லியுள்ளார். யாழ் நுலக எரிப்பு ஐதேக ஆட்சிக்காலத்தில் நடத்தது. சந்திரிகா அம்மையார் தீர்வு திட்டத்தை கொண்டு வந்தபோது அதை நிராகரித்து கிளர்ந்தெழுந்தவர் ரணில். இப்பொழுது இவர்கள் ஒட்டுமொத்த பழியையும் மஹிந்தவின் மீது சுமத்தி தங்களை தற்காத்துக் கொள்ள முயல்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்தாலேன்ன, யார் இருந்தாலென்ன சிங்கள தரப்பில் இதே மாதிரியே யுத்தம் தொடர்ந்திருக்கும்.

இன்று ரணிலை தமிழர்களிற்கு சார்பானவராக காண்பிக்க தமிழ் தலைமைகள் முயற்சிக்கிறார்கள். ரணில் அரசை கப்பாற்றியமைக்காகத்தான் அவர்களிற்கு கட்சி சார்ந்து கம்பெரலிய திட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய தரப்புக்களிற்கு கொடுக்கப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதாக கட்சி சார்ந்ததுதான். டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலை துரோகமென்றவர்கள், அதே அரசியலையே இவர்கள் திரும்ப செய்கிறார்கள்.

மைத்திரி ரணில் மோதலில் ரணிலை காப்பாற்றுவதாக இருந்திருந்தால் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாகவேனும் பேரம் பேசியிருக்க முடியும். காணாமல் போனோர் தொடர்பான 2 வருட காலமாக அவர்களின் உறவினர்கள் வீதியிருந்து போராடுமபோது அதற்கான பதிலை அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால் இவர்கள் தேர்தலை கருதி வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம் பேரம் பேசி, சோரம் போய்வி்ட்டார்கள். ரணில் அமைச்சரவையில் நிழல் அமைச்சர்களாகவே இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையிலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணிலை காட்டுவதற்கு விஜயகலா முயற்சிக்கிறார். ஆனால் தமிழர்களை பொறுத்தவரை பிரபாகரன் அவர்கள்தான் தேசியத்தலைவர். இருக்கும்போதும் அவர்தான் தேசியத்தலைவர். இல்லாதபோதும் அவர்தான் தேசியத்தலைவர்“ என்றார்.

இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச் சூழல் நட்புமிக்க துணிப்பைகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: ஈழவன்