லிபியாவில் உக்கிரமடையும் உள்நாட்டு போர்

லிபியாவில் உக்கிரமடைந்து வரும் உள்நாட்டு போர் விரைவில் நிறைவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘லிபியா தலைநகர் திரிபோலியின் தஜூரா பகுதியில் அகதிகள் முகாம்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து குழுவினரும் உடனடியாக பதற்றத்தைத் தணித்து போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டையில் சுமார் 1,000 பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது சுமார் 5,000 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor