சாட்டை’யுடன் போராடும் வீரமிக்க ஆசிரியை!!

விமர்சனம்: ராட்சி

ஆர்.புதூர் என்ற தென் தமிழகக் கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளி பொறுப்பற்ற ஆசிரியர்கள், கவனிக்கப்படாத, சரிவர கற்பிக்கப்படாத மாணவர்கள், ஓட்டையும் உடைசலுமாய் குப்பையும் அழுக்கும் நிறைந்த சுற்றம் என்று சரியற்று இயங்கி வருகிறது.
ஊர் மக்களிடம் நல்ல விதமான எண்ணமே இல்லாத அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதாராணி

(ஜோதிகா). அவர் தலைமையேற்ற பின்பு அந்த பள்ளியில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, மாணவர்களுக்கு ஏற்படும் முன்னேற்றம் என்ன என்பதை விளக்குகிறது ராட்சசி படத்தின் திரைக்கதை.

இதை அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கியுள்ளார்.

பத்தாம் வகுப்பில் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறையும் என்பதற்காக ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 82 மாணவர்களை தோல்வியடையச் செய்கிறார்கள். புதிதாகப் பதவியேற்ற தலைமையாசிரியரான ஜோதிகா அவர்களை மீண்டும் தேர்ச்சி பெற வைத்து பொதுத் தேர்வு எழுதச் செய்கிறார்.
கல்வியை வியாபாரமாக்கி, மாணவர்களை இயந்திரமாக்கும் தனியார் பள்ளித் தாளாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெரடிக்கு ஒரு அரசு பள்ளி அனைத்து தரத்திலும் முன்னேறி தனது வியாபாரத்தைக் கெடுப்பதைப் பொறுக்க முடியவில்லை.
எனவே பல வழிகளிலும் தலைமையாசிரியை கீதாராணியை ( ஜோதிகா) எதிர்க்கிறார். மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவத்தை கருவாகப் பயன்படுத்தி அவர் தலைமையாசிரியை கீதாராணிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்.
அவை என்ன, அதைத் தாண்டி கீதாராணி எவ்வாறு மீண்டு வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
“பாட புத்தகத்தில் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என்பதை ஆசிரியர்களான நீங்கள் படிக்கவில்லையா”, “அரசு எந்த உதவியும் செய்யாமல் கோவில் சுவர்கள் மட்டும் எவ்வாறு புதிதாகவே இருக்கின்றன”, “நீங்கள் படித்த பள்ளிக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்”, “அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, ஐந்து சதவீதம் பேர் கூட அரசு பொறியியல் கல்லூரிகளிலோ ஏன் படிக்கவில்லை”, “கணிதத்தில் நூறு மார்க் எடுக்கும் ஒரு பையன் அறிவியலில் தோல்வியடைந்தால் அவன் மக்கா?” போன்ற வசனங்கள் திரையரங்கில் கைதட்டல்களைப் பெறுகின்றன.
உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதி செய்யும் வில்லத்தனங்களும், உள்ளூர் அரசியல்வாதியாக மிரட்டும் அருள்தாஸின் நடிப்பும் பாராட்டவைக்கிறது.
உடற்கல்வி ஆசிரியராக சத்யன் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் திரையில் தோன்றுகிறார். பூர்ணிமா பாக்யராஜின் கதாபாத்திரத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம். ஒன்றிரண்டு வசனங்கள் மட்டும் பேசி செல்கிறார்.
தனியார் பள்ளித் தாளாளராக வரும் ஹரிஷ் அத்தனை வில்லத்தனத்திலும் அவருக்குள்ளும் இருக்கும் நன்மையும் ஈரமும் ரசிக்கவைக்கிறது. இரண்டாம் வகுப்பு மாணவனாக வரும் கதிர் அத்தனை பேர் மனங்களையும் கொள்ளையடித்து செல்கிறார்  “உங்களப் பொண்ணு பாக்க நான் வரட்டுமா” என்று கதிர் எதார்த்தமாகக் கேட்கும் போது திரையரங்கமே ஆரவாரம் செய்கிறது.
திருமணத்திற்குப் பிறகும் தனது திரை வாழ்வைத் தொடர்ந்தாலும் தனக்குப் பொருத்தமான கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. இந்த படத்திலும் அது தொடர்கிறது. வித்தியாசமான உடையணிந்து மிடுக்கான தோற்றத்தில் வலம்வரும் ஜோதிகா திரைப்படம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். அவரைச் சுற்றித் தான் மொத்த கதையும் நகர்கிறது. திமிருடனும் மிடுக்காகவும் அனைவரையும் எதிர்த்து உண்மைக்காக முன்னேறும் அவருக்குள்ளும், வீரம் மட்டுமின்றி ஈரமும் இருப்பதைக் காட்டும் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.
சமீபகாலமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் படித்தால் தான் கௌரவம் என்ற கண்ணோட்டமும் மக்கள் மனதில் பல விதங்களிலும் ஆழமாகத் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் குறித்து சிந்தித்து செயல்படும் பல ஆசிரியர்கள் இருந்தாலும் சம்பளத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலையை சரியாகச் செய்யாத அரசு பள்ளி ஆசிரியர்களை இந்த ராட்சசி நிச்சயம் சிந்திக்க வைப்பாள்.
2012ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மித மிஞ்சிய சாயலும், ஒரு கட்டத்திற்கு மேல் இப்படித்தான் கதை பயணிக்கப் போகிறது என்று எளிமையாக யூகிக்க முடிவதும் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
சான் ரோல்டன் பின்னணி இசையில் காட்டியிருக்கும் கவனத்தை பாடல்களில் தவறவிட்டுள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பிலோமின்ராஜ். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ் சமூகக் கருத்துக்களை திரைவழி சொல்ல விரும்பி பாடம் எடுத்திருக்கிறார். அடுத்தமுறையேனும் பாடத்தைக் குறைத்துக் கொண்டு படத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
மொத்தத்தில் ராட்சசி ஜோதிகா ‘சாட்டை’யுடன் போராடும் வீரமிக்க தலைமையாசிரியை.

Recommended For You

About the Author: Editor