உடலை ஆடையாக்கிய அமலா பால்!!

சர்ச்சைக்குள்ளான ஆடை டீசரைத் தொடர்ந்து அதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் தன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

முதல் படத்தில் நகைச்சுவை கலந்த மென்மையான காதலை சொன்ன ரத்னகுமார், தன் அடுத்த படத்தில் திரில்லர் ஜானரை கையிலெடுத்துள்ளார்.

அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் தொடக்கம் முதலே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

ஆடை என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. கிழிந்த உடையுடன் உதவி கேட்டு அழும் பெண்ணாக அதில் தோன்றியிருப்பார் அமலா பால்.

இப்படத்தின் டீசர் சென்றமாதம் வெளியாகி வைரலானது. ஆடையில்லாமல் இதன் டீசரில் தோன்றும் அமலா பாலின் காட்சியினால் விஜய் சேதுபதியுடன் நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டார்.

ஆணாதிக்க மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் நடந்துகொள்வது தமிழ்த் திரையுலகிற்கு நல்லதல்ல என்ற அமாலா பாலின் அறிக்கை விவாதப் பொருளானது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலா பால். ‘பெட்’ கட்டும் பழக்கம் கொண்டவரான அமலா பாலை அவரது அம்மா ரஞ்சனி ‘முதல்ல பெட் கட்டுற வேலைய வெச்சுக்காத..அப்புறம் அது போதையாயிடும்’ என எச்சரிப்பதுடன் டிரெய்லர் தொடங்குகிறது.

‘நம்ம உடம்பு தான் ஆக்சுவல் பர்த் டே டிரஸ்’ எனக் கூறும் அமலா பால் நண்பர்களுடன் மது, சிகரெட், பைக் ரைடிங்க், இரவில் பார்ட்டி என தன் சுதந்திரத்தைத் தானே தேர்தெடுக்கும் பெண்ணாகத் தோன்றியுள்ளார்.

டீசரையும் டிரெய்லரையும் பார்க்கும்போது, ஆடை மீதான தனித்த பார்வை கொண்ட அமலா பால், பெட் கட்டும் பழக்கம் கொண்டவர் என்பதால் ஆடை சார்ந்த பெட் ஒன்றினால் சிக்கலை சந்திப்பார் என்றும் அதன் பிறகு அவற்றிலிருந்து மீண்டு வரும் அனுபவமாக ஆடை திரைப்படம் இருக்கும் என்றும் கணிக்க முடிகிறது.

ஒளிப்பதிவும் இசையும், அதற்கேற்ற வேகமான படத்தொகுப்பும் டிரெய்லரை ரசிக்க வைக்கின்றன. அமலா பால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாடகர் மற்றும் மேயாத மான் படத்தின் இசையமைப்பாளரான பிரதீப்குமார் இசையமைக்கிறார். வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜூலை 19ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.


Recommended For You

About the Author: Editor